காலையில் மூட்டு வலி: தூங்கி எழும்போது மூட்டுகள் ஏன் விறைப்பாக இருக்கின்றன?

சுருக்கமான பதில்
காலையில் மூட்டு வலி பொதுவாக, பல மணி நேரம் அசையாமல் இருந்ததால் மூட்டுகள் விறைப்பதால் வருகிறது; எழுந்த 30 நிமிடத்துக்குள் குறைந்துவிடும் விறைப்பு சகஜம், குறிப்பாக ஆஸ்டியோஆர்த்ரைடிஸில். மெதுவான அசைவு, சூடு, சுறுசுறுப்பாக இருப்பது உதவும். 30 நிமிடத்துக்கு மேல் நீடிக்கும் விறைப்பு, அல்லது வீங்கிய, சூடான மூட்டுகளுக்கு மருத்துவரின் பரிசோதனை தேவை.
தூங்கி எழும்போது எல்லா மூட்டுகளும் ஏன் வலிக்கின்றன?
இரவு முழுக்கப் படுத்திருந்த பிறகோ, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்த பிறகோ, நீங்கள் நடமாடத் தொடங்கும் வரை மூட்டுகள் விறைப்பாக, வலியுடன் இருக்கலாம். பொதுவான காரணங்கள்:
- ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் (மூட்டுத் தேய்மானம்), பெரும்பாலும் முழங்கால், இடுப்பு, கையின் சிறு மூட்டுகளைப் பாதிக்கும் நீண்ட கால மூட்டு நோய். சிறிது நேரம் அசையாமல் இருந்தால் வலியும் விறைப்பும் அதிகமாகும்.
- ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் (முடக்கு வாதம்), மூட்டுகளின் உட்புறப் படலம் வீக்கமடையும் நிலை. வலியும் விறைப்பும் பெரும்பாலும் உடலின் இரண்டு பக்கமும் இருக்கும், காலையில் அதிகமாக இருக்கும்.
- மெனோபாஸுக்கு முந்தைய காலமும் மெனோபாஸும். ஈஸ்ட்ரோஜன் குறைவதால் மூட்டுகளில் உளைச்சலும் வலியும் வரலாம்.
- சமீபத்திய வைரஸ் தொற்று. வைரஸ் காய்ச்சலுக்குப் பிறகு மூட்டுகள் வலிக்கலாம். இந்தியாவில் பரவலாக வந்த சிக்குன்குனியா, நீண்ட காலம் நீடிக்கும் மூட்டு வலியை விட்டுச் செல்லலாம் (கீழே உள்ள கேள்விகளைப் பாருங்கள்).
- முந்தைய நாள் அதிக உபயோகம், உதாரணமாக நீண்ட நடை, ஒரு கிரிக்கெட் ஆட்டம் அல்லது கடுமையான வீட்டு வேலை.
- உளைச்சலுக்கான பிற காரணங்கள். சோர்வு, குளிர்வது போன்ற உணர்வு அல்லது மலச்சிக்கலுடன் தசைகளிலோ மூட்டுகளிலோ உளைச்சல் இருந்தால், அது தைராய்டு குறைவால் (ஹைப்போதைராய்டிசம்) வரலாம். மருத்துவர் பரிசோதிக்கலாம்.
காலை விறைப்பு எவ்வளவு நேரம் இருக்கலாம்?
ஒரு பயனுள்ள அளவுகோல் 30 நிமிடம்.
- 30 நிமிடத்துக்குள், அசைய அசையக் குறைந்தால்: ஆஸ்டியோஆர்த்ரைடிஸுக்கோ, இரவு முழுக்க அசையாமல் படுத்திருந்ததற்கோ பொதுவானது.
- 30 நிமிடத்துக்கு மேல்: மருத்துவரைப் பார்ப்பது நல்லது. நீண்ட காலை விறைப்பு, ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் போன்ற மூட்டு வீக்க நோய்களுக்கு அதிகம் பொருந்தும், குறிப்பாக மூட்டுகள் வீங்கி, சூடாக அல்லது தொட்டால் வலிப்பதாக இருந்தால்.
- தோள்கள், கழுத்து அல்லது இடுப்பில் 45 நிமிடத்துக்கு மேல், குறிப்பாக உங்களுக்கு 50 வயதுக்கு மேல் என்றால்: மருத்துவரைப் பாருங்கள். ஒரு சாத்தியமான காரணம் பாலிமயால்ஜியா ருமாட்டிகா; இது அந்த மூட்டுகளைச் சுற்றிய தசைகளில் ஏற்படும் வீக்கம், மற்ற நோய்களை விலக்கிய பிறகு மருத்துவர் இதைப் பரிசோதிக்கலாம். இது பெண்களுக்கு அதிகம் வருகிறது.
சில நாட்கள் காலையில், உங்கள் விறைப்பு எவ்வளவு நேரம் இருக்கிறது, எந்த மூட்டுகளில், ஒரு பக்கமா இரண்டு பக்கமா, அவை வீங்கியிருக்கின்றனவா என்று குறித்து வையுங்கள். மருத்துவரைப் பார்க்கும்போது ஒரு சிறு டைரி உதவும்.
குளிர்காலத்தில் மூட்டு வலி ஏன் அதிகமாகிறது?
குளிர்ந்த காலைகளிலும், மழைக்கால ஈரப்பதத்திலும், டிசம்பரில் வடக்கே பயணம் செய்யும்போதும் மூட்டுகள் அதிகம் வலிப்பதாகப் பலர் உணர்கிறார்கள். ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் அறிகுறிகள் வந்து போகலாம், நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் என்பதுடனும் வானிலையுடனும் கூடத் தொடர்புடையதாக இருக்கலாம் என்று NHS குறிப்பிடுகிறது.
குளிர் அல்லது மழை நாட்களில் குறைவாக அசைவது எளிது, அசையாமல் இருக்கும் மூட்டுகள் விறைக்கும். சில எளிய வழிகள்:
- உடலைச் சூடாக வையுங்கள். எழுந்தவுடன் சால்வை அல்லது ஸ்வெட்டர், கால்களுக்கு சாக்ஸ்.
- சூட்டுடன் நாளைத் தொடங்குங்கள். வெதுவெதுப்பான குளியல் பலருக்கு உடல் இளக உதவுகிறது.
- வெளியே குளிராகவோ மழையாகவோ இருக்கும்போது வீட்டுக்குள்ளேயே அசையுங்கள்: வீட்டுக்குள் நடங்கள், படி ஏறுங்கள், அல்லது மெதுவாக ஸ்ட்ரெச் செய்யுங்கள்.
பல இந்திய வீடுகளில், குளிர்ந்த காலையில் ஒரு டம்ளர் சூடான மஞ்சள் பால் பழக்கமாக உள்ளது. இது இதமான ஒரு பாரம்பரியம், மூட்டுகளுக்கு நிரூபிக்கப்பட்ட மருந்து அல்ல.
மூட்டுகளை இயற்கையாக எப்படி இயங்க வைப்பது?
மூட்டுகளை இளக்கமாக வைக்கச் சிறந்த வழி, அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதுதான். தேவைப்பட்டால் வலிக்கும் மூட்டுக்குச் சிறிது நேரம் ஓய்வு கொடுங்கள், ஆனால் அதை அசைப்பதை முழுதாக நிறுத்திவிடாதீர்கள்.
- தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். நடை, சைக்கிள், நீச்சல் அல்லது யோகா மூட்டுகளையும் அவற்றைச் சுற்றிய தசைகளையும் இயங்க வைக்கும்.
- அடிக்கடி ஸ்ட்ரெச் செய்யுங்கள், குறிப்பாக மேசையிலோ டிராஃபிக்கிலோ நீண்ட நேரம் உட்கார்ந்த பிறகு.
- சரியான எடையில் இருங்கள்; பருப்பு, காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், தயிர் உள்ள சமச்சீரான உணவைச் சாப்பிடுங்கள்.
- புகைபிடிக்காதீர்கள்.
ஒரு மூட்டு திடீரென்று சிவந்து, சூடாக அல்லது வீங்கினால், வலியைப் பொருட்படுத்தாமல் தொடராதீர்கள். அதற்கு ஓய்வு கொடுத்து, பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
காலை விறைப்பு எப்போது ஆர்த்ரைடிஸின் அறிகுறி?
இந்த அறிகுறிகள் மூட்டுகளில் வீக்கத்தைக் காட்டுகின்றன; இதற்கு மருத்துவரின் பரிசோதனை தேவை:
- பெரும்பாலான காலைகளில் 30 நிமிடத்துக்கு மேல் நீடிக்கும் விறைப்பு
- வீங்கிய, சூடான அல்லது தொட்டால் வலிக்கும் மூட்டுகள், பெரும்பாலும் முதலில் கை, கால்களின் சிறு மூட்டுகள்
- உடலின் இரண்டு பக்கமும் அதே மூட்டுகள் பாதிக்கப்படுவது
- காலையில் விரல்களை முழுதாக மடக்கவோ கை முஷ்டியை மூடவோ முடியாமல் இருப்பது
- மிகுந்த சோர்வு, வியர்வை, அதிகக் காய்ச்சல், பசியின்மை அல்லது எடை குறைவது
இவை ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸின் அறிகுறிகளாக இருக்கலாம்; இதை ஆரம்பத்திலேயே பரிசோதிப்பது நல்லது.
விறைப்பான, உளைச்சலுடன் கூடிய தோள்கள், கழுத்து அல்லது இடுப்புடன் புதிதாகத் தலைவலி, உச்சந்தலையில் வலி, அல்லது மெல்லும்போதோ பேசும்போதோ தாடை வலி இருந்தால், அன்றே மருத்துவரைப் பாருங்கள். இரட்டைப் பார்வை அல்லது ஒரு கண்ணில் பார்வை போவது போன்ற பார்வையில் எந்தத் திடீர் மாற்றம் இருந்தாலும், உடனே அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுங்கள். இதனுடன் தொடர்புடைய டெம்போரல் ஆர்டரைட்டிஸ் என்ற நிலைக்கு விரைவில் சிகிச்சை அளிக்காவிட்டால், பார்வை இழப்பு அல்லது பக்கவாதம் வரலாம்.
மூட்டு வலிக்கு மருத்துவர் என்ன பரிசோதனைகளைப் பரிந்துரைக்கலாம்?
உங்கள் மூட்டுகள், காலை விறைப்பு, சமீபத்திய உடல்நலக் குறைவு, தடிப்பு அல்லது காய்ச்சல் பற்றி மருத்துவர் கேட்பார்; மூட்டுகளில் வீக்கம், சூடு, தொட்டால் வலி, அவை எவ்வளவு தூரம் அசைகின்றன என்று பரிசோதிப்பார்.
அவர் இவற்றைப் பரிந்துரைக்கலாம்:
- முழு இரத்தப் பரிசோதனை (CBC)
- C-ரியாக்டிவ் புரோட்டீன் (CRP), ESR (செடிமென்டேஷன் ரேட்): உடலில் வீக்கத்தைக் காட்டும் இரத்தப் பரிசோதனைகள்
- ஆட்டோஇம்யூன் நோய்களுக்கான இரத்தப் பரிசோதனைகள்; இவற்றில் நோய் எதிர்ப்பு மண்டலமே உடலின் சொந்தத் திசுக்களைத் தாக்குகிறது
- சோர்வாக, குளிராக அல்லது மந்தமாக உணர்ந்தால், தைராய்டு பரிசோதனை (TSH)
- வலிக்கும் மூட்டுகளின் எக்ஸ்-ரே
- தொற்று அல்லது கவுட் படிகங்கள் இருக்கிறதா என்று பார்க்க, வீங்கிய மூட்டிலிருந்து எடுக்கப்படும் திரவ மாதிரி
திடீர்க் காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி வந்திருந்தால், மருத்துவரிடம் சொல்லுங்கள். சிக்குன்குனியாவும் டெங்குவும் ஒன்று போலத் தெரியலாம்; டெங்கு இல்லை என்று உறுதியாகும் வரை, இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கக்கூடிய ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி வலி நிவாரணிகளைவிட பாராசிட்டமால் விரும்பப்படுகிறது.
மக்கள் கேட்கும் கேள்விகள்
காலையில் விரல் மூட்டுகள் ஏன் வலிக்கின்றன?
விறைப்பான, வலிக்கும் விரல் மூட்டுகள் ஆஸ்டியோஆர்த்ரைடிஸால் வரலாம்; இது பெரும்பாலும் கட்டைவிரலின் அடிப்பகுதியையும் விரல் நுனிக்கு அருகிலுள்ள மூட்டுகளையும் பாதிக்கும், மூட்டுகளில் சிறு புடைப்புகளையும் விட்டுச் செல்லலாம். இவை ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். உங்கள் விரல்கள் வீங்கியோ சூடாகவோ இருந்தால், ஒவ்வொரு காலையும் நீண்ட நேரம் விறைப்பாக இருந்தால், அல்லது கை முஷ்டியை மூட முடியவில்லை என்றால் மருத்துவரைப் பாருங்கள்.
எல்லா மூட்டுகளும் வலிக்கின்றன, உடலில் தெம்பே இல்லை, ஏன்?
மூட்டு உளைச்சலுடன் கடும் சோர்வு, வைரஸ் காய்ச்சலுக்குப் பிறகு வரலாம். சோர்வு ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸின் ஒரு பகுதியும் கூட; பாலிமயால்ஜியா ருமாட்டிகா காலை விறைப்புடன் மிகுந்த சோர்வையும் எடை குறைவையும் கொண்டு வரலாம். ஒன்றிரண்டு வாரங்களுக்கு மேல் இப்படி இருந்தால், டானிக்குகள் வாங்குவதற்குப் பதிலாக மருத்துவரைப் பார்த்து, இரத்தப் பரிசோதனைகள் தேவையா என்று கேளுங்கள்.
சிக்குன்குனியாவுக்குப் பிறகு மூட்டு வலி எவ்வளவு காலம் இருக்கும்?
பெரும்பாலானவர்களுக்குச் சிக்குன்குனியாவுக்குப் பிறகு மூட்டு வலி சில நாட்களில் குறைந்துவிடும், ஆனால் சிலருக்கு அது வாரங்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் கூட நீடிக்கும். தேவைப்படும்போது ஓய்வெடுங்கள், நிறையத் திரவங்கள் குடியுங்கள், மூட்டுகளை மெதுவாக அசைத்துக்கொண்டே இருங்கள். வலி சில வாரங்களுக்கு மேல் நீடித்தால், திரும்பத் திரும்ப வந்தால், அல்லது மூட்டுகள் வீங்கினால், வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்று பார்க்க மருத்துவரைப் பாருங்கள்.
காலை விறைப்பு வயதாவதன் ஒரு பகுதி மட்டும்தானா?
சுமார் 45 வயதிலிருந்து ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் அதிகம் காணப்படுகிறது; எனவே வயதாக ஆக, எழுந்த பிறகு சில நிமிடங்கள் விறைப்பாக இருப்பது சகஜம். ஆனால் வயது கதையின் ஒரு பகுதி மட்டுமே; எந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது உதவும். விறைப்பு ஒவ்வொரு காலையும் நீண்ட நேரம் நீடித்தால், மேலும் மேலும் மோசமானால், அல்லது வீங்கிய மூட்டுகளுடன் வந்தால், அதை வயதின் மேல் போடாதீர்கள்.
இந்த வழிகாட்டி பொதுவான தகவல் மட்டுமே, மருத்துவ ஆலோசனை அல்ல; இது இன்னும் மருத்துவரால் சரிபார்க்கப்படவில்லை. மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசிப்பதற்கு இது மாற்று அல்ல. உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றாலோ, கவலையாக இருந்தாலோ, உறுதியாகத் தெரியவில்லை என்றாலோ, தயவுசெய்து மருத்துவரைப் பாருங்கள்.


